செய்திகள்

அரச்சலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Published On 2017-04-12 17:56 IST   |   Update On 2017-04-12 17:56:00 IST
அரச்சலூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரச்சலூர்:

ஈரோடு மாவட்டம் முழுவதும் வறட்சியால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்காக ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குடங்களுடன் அழையும் காட்சி பரிதாபமாக உள்ளது.

அரச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்ட புதூர் 7-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குடிக்க தண்ணீர் வரவில்லையாம். இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலி குடங்களுடன் இன்று பழனி ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு அரச்சலூர் போலீசார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சவுந்தரராஜன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினர். மேலும் பொதுமக்களுக்கு உடனடியாக டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டனர். சுமார் 45 நிமிடம் சாலை மறியலால் பரபரப்பு நிலவியது.

Similar News