செய்திகள்

பண்ருட்டியில் புதுமாப்பிள்ளையை கொன்று நாடகமாடிய மனைவி கைது

Published On 2017-04-11 21:21 IST   |   Update On 2017-04-11 21:21:00 IST
பண்ருட்டியில் திருமணமாகிய 9-வது நாளில் கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை வால்கார வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28), சிற்பக் கலைஞர். இவருக்கும் கடலூர் மணகுப்பத்தை சேர்ந்த விஜி (20) என்பவருக்கும் கடந்த 9 நாட்களுக்கு முன் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜியின் வீட்டில் வைத்து தாலி பிரித்துகோர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ரமேசும் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து ரமேசும் அவரது மனைவி விஜியும் நேற்று பண்ருட்டியில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று மாலை ரமேஷ் வீட்டில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் கங்காதரன், சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கடலூரில் இருந்து மோப் பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் ஓடியது, யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு விசாரணையை முடுக்கிவிட்டார். இந்த கொலை தொடர்பாக ரமேசின் மனைவி விஜி, தாய் ராணி, தம்பி சதீஷ் ஆகியோரிடம் போலீசார் தனிதனியாக தீவிர விசாரணை நடத்தினர்.

விஜியிடம் விசாரணை நடத்தியதில் மர்ம நபர் என் கணவரை கொலை செய்து விட்டார் என்று கூறினார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் துரித விசாரணை நடத்தினர். அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பல ஆண்களின் பெயர் இருந்தது. இந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரமேசை கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விஜியிடம் நடத்திய விசாரணையில் ரமேசை நான்தான் கொலை செய்தேன் என்று அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து விஜியை போலீசார் கைது செய்தனர்.

கணவர் ரமேசை கொலை செய்தது ஏன் என்பது குறித்து விஜி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:-

என்னை என் பெற்றோர் கட்டாயப்படுத்தி ரமேசுக்கு திருமணம் செய்து வைத்தனர். எனக்கு அவருடன் வாழ பிடிக்கவில்லை. இல்லற வாழ்க்கையில் என்னை ரமேஷ் சந்தோ‌ஷபடுத்தவில்லை. இதனால் எனக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது என்னை தாம்பத்தியத்துக்கு அழைத்தார் அதற்கு நான் மறுத்தேன். நீ வரவில்லை என்றால் உன் அம்மாவை அனுப்பு என்று ரமேஷ் கூறினார். இதைகேட்டு நான் ஆத்திரம் அடைந்தேன். அப்போது எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நான் சுவரில் முட்டி அழுதேன்.

எப்படியும் ரமேசை கொலை செய்யவேண்டும் என்று திட்டம் தீட்டினேன். சிறிது நேரத்தில் ரமேஷ் வீட்டில் தூங்கிவிட்டார். இதை பயன்படுத்தி கிரைண்டரில் இருந்த கல்லை எடுத்து ரமேசின் தலையில் போட்டேன். அதில் அவர் தலை நசுங்கி இறந்தார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் அப்படியே அமர்ந்தேன்.

அந்த நேரத்தில் வெளியே கடைக்கு சென்ற ரமேசின் தாய் ராணி வருவதை பார்த்தேன். நான் வெளியே ஓடிவந்து கதறி அழுதேன். என்கணவரை யாரோ வெளியில் இருந்து வந்த நபர் கொலை செய்துவிட்டார் என்று நாடகமாடினேன். யாரும் நம்பவில்லை.

என்னிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று நான் தான் கணவரை கொலை செய்தேன் என்று ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு விஜி தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

திருமணமாகி 9-வது நாளில் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News