செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆதரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
இந்நிலையில், அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். தினகரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சரத்குமார் ஆதரவு தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “தற்போது ஏதே ஒரு மனஸ்தாபத்தில் பிரிந்து இருக்கும் அதிமுகவினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள். கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றவே ஆதரவு. வேறு யாரும் இதில் உள்ளே நுழைந்துவிடக் கூடாது” என்றார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி தற்போது மீண்டும் ஆளும் கட்சியாக உள்ள சசிகலா தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னதாக அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) வேட்பாளர் மதுசூதனனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.