செய்திகள்

விருத்தாசலம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

Published On 2017-04-05 17:14 IST   |   Update On 2017-04-05 17:14:00 IST
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விருத்தாசலம்:

விருத்தாசலம் மணிமுக்தாற்று அணைக்கட்டு அருகே உள்ள வைக்கோல் போரில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நேற்று இரவு பார்த்தனர். அவர்கள் கம்மாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை பார்த்தனர். முகம் மற்றும் கை-கால்களில் காயம் இருந்தது. வாலிபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்த போது அவர் விருத்தாசலம் அருகே உள்ள சொட்டவணம் பகுதியை சேர்ந்த விவசாயி வேல்முருகன் என்பவரது மகன் வெற்றிவேல் (வயது 21) என்பது தெரியவந்தது.

வெற்றிவேல் வேப்பூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி 3-ம் ஆண்டு படித்ததும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி விடுமுறையில் வெற்றிவேல் வீட்டுக்கு வந்து விட்டு கல்லூரி செல்வதாக கூறி சென்றதும் தெரியவந்தது.

வெற்றிவேலின் தந்தை வேல்முருகன் கம்மாபுரம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் தனது மகனின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறியுள்ளார்.

வீட்டில் இவரது கல்லூரிக்கு செல்வதாக கூறிச்சென்ற வெற்றிவேல் எப்படி மர்மமாக இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News