செய்திகள்

கடலூரில் 16 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: பெற்றோருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2017-04-04 20:32 IST   |   Update On 2017-04-04 20:32:00 IST
கடலூரில் 16 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளதாக வந்த புகாரின் பேரில் சிறுமியின் பெற்றோரை போலீஸ் தேடி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் முதுநகர் அன்னவெளி காலனியை சேர்ந்தவர் இருசப்பன். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு வெண்ணிலா(வயது 16) என்ற மகள் உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் வெண்ணிலாவுக்கும், விழுப்புரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த வீரன்(24) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பின் தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து சிறுமி வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து வெண்ணிலாவை கடலூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.வெண்ணிலாவின் பெற்றோர் அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல அதிகாரிகளுடன் பேசினர். அதற்கு அதிகாரிகள் இனி திருமண வயது வந்தவுடன் தான் உங்கள் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும்.மேலும் மாதத்துக்கு ஒரு முறை வெண்ணிலாவை இங்கு அழைத்து வந்து கையெழுத்து போட வேண்டும் என்று கூறினர்.

இதை ஏற்றுக் கொண்ட வெண்ணிலாவின் தந்தை இருசப்பன், தாய் ஜானகி ஆகியோர் வெண்ணிலாவை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில் கையெழுத்து போடுவதற்காக வெண்ணிலா குழந்தைகள் நல அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர், என்னை வற்புறுத்தி ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டவருடன் கட்டாய திருமணம் நடத்தி வைத்தனர் என அதிகாரிகளிடம் கூறினார்.

இதுகுறித்து குழந்தைகள் நல குழு தலைவர் ஜெயந்தி ரவிச்சந்திரன், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். எனவே சிறுமியின் தந்தை இருசப்பன், தாய் ஜானகி, கணவர் வீரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வெண்ணிலாவின் பெற்றோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News