செய்திகள்

டெல்லியில் நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவாக விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-30 17:17 IST   |   Update On 2017-03-30 17:17:00 IST
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:

டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் மணிமுக்தாறு பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு ஜனநாயக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பினர்.

மேலும் விருத்தாசலம் பகுதியில் கரும்பு பயிரிட்ட விவசாயிகளிடம் இருந்து கரும்பு ஏற்றுமதி செய்து விட்டு அதற்கான நிலுவைத் தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் தனியார் சர்க்கரை ஆலையை கண்டிப்பது. அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மணிமுக்தாறு பாதுகாப்புக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் தனவேல் தலைமை தாங்கினார். விவசாயிகள் ராமர், ராஜேந்திரன், நாகராஜன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News