செய்திகள்

என்.எல்.சி. சுரங்கநீரை சென்னைக்கு அனுப்பினால் கடலூர் பாலைவனமாகிவிடும்: விவசாயிகள்

Published On 2017-03-27 12:44 IST   |   Update On 2017-03-27 12:44:00 IST
நெய்வேலி என்.எல்.சி. சுரங்க நீரை சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்புவதால் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 40 கிராமங்கள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெய்வேலி:

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க நீரை சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்புவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடிநீர் அனுப்புவதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.



இதுதொடர்பாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் கூறியதாவது:-

வாலாஜா ஏரிக்கு அனுப்பப்படும் என்.எல்.சி. சுரங்க நீரை பயன்படுத்தி குறிஞ்சிப்பாடி, வடலூர், புவனகிரி ஆகிய பகுதிகளில் 40 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகின்றது.

தற்போது திடீரென்று வாலாஜாஏரி தண்ணீரை சென்னைக்கு அனுப்புவதால் விவசாயம் பாதிக்கப்படும். கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும். எனவே அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினையாலும், பருவ மழை பெய்யாததாலும் வீராணம் ஏரி வறண்டுள்ளது. இதனால் சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீரை சென்னைக்கு கொண்டு செல்வதால் கடலூர் மாவட்ட விவசாயமே அழிந்து விடும். எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் இந்த திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாயிகளை கலந்து பேசி போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற தலைவர் ராமலிங்கம் கூறியதாவது:-

என்.எல்.சி. சுரங்க நீரை சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்புவதால் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 40 கிராமங்கள் பாதிக்கப்படும். கால்நடைகளுக்கும் தண்ணீரில்லாத நிலை ஏற்படும்.

இந்த பகுதியே பாலைவனமாக மாறிவிடும். எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிடவேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் குதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News