செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. சுரங்க நீரை குழாய்கள் மூலம் சென்னைக்கு அனுப்பும் பணி தொடங்கியது

Published On 2017-03-27 12:16 IST   |   Update On 2017-03-27 12:16:00 IST
சென்னை நகரில் ஏற்பட்டுள்ள கடுமையான குடிநீர் பஞ்சத்தை போக்க நெய்வேலி என்.எல்.சி. சுரங்க நீரை குழாய்கள் மூலம் அனுப்பும் பணி தொடங்கியது.
நெய்வேலி:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் வறண்டு விட்டன.

மற்ற ஏரிகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. இதனால் சென்னை நகரில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 77 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.

வடகிழக்கு பருவ மழை பெய்யாததாலும், வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்ததாலும் ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.

இதைத்தொடர்ந்து தண்ணீர் இல்லாமல் வீராணம் ஏரி வறண்டது. எனவே இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது திடீரென்று நிறுத்தப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தேவையை சமாளிக்க அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.



நெய்வேலி என்.எல்.சி.யில் 3 சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சென்னையில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தலாம் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

என்.எல்.சி.சுரங்கத்தில் இருந்து நீர் ராட்சத குழாய்கள் மூலம் வெளியேற்றப்படும் தண்ணீர் நெய்வேலிக்கு அருகே உள்ள வாலாஜா ஏரிக்கு அனுப்பப்படுகிறது. விநாடிக்கு 100 கனஅடி முதல் 350 கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த நீர் அங்கிருந்து வடலூர் அருகே உள்ள பரவனாற்றுக்கு கொண்டு வரப்படுகிறது. பரவனாற்றில் கரைமேடு என்ற இடத்தில் பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் தண்ணீரை தேக்கி ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சப்பட்டு வீராணம் குடிநீர் திட்ட குழாய்களுடன் இணைக்கப்பட்டு வடக்குத்தில் உள்ள நீர்ஏற்று நிலையத்துக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்படுகிறது.

பின்னர் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் ராட்சத குழாய் மூலம் தண்ணீர் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சோதனை ஓட்டமாக தண்ணீர் அனுப்பப்பட்டது.

நேற்று முதல் சென்னைக்கு அங்கிருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Similar News