செய்திகள்
வடகாட்டில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்: வடகாட்டில் 2-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதம்

Published On 2017-03-25 11:52 IST   |   Update On 2017-03-25 11:52:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகாட்டில் 2-வது நாளாக பொது மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இருப்பினும் வடகாட்டிலும், நல்லாண்டார் கொல்லையிலும் போராட்டம் தொடர்ந்து நீடித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி வடகாட்டில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக அப்பகுதி மக்களும், சுற்று வட்டார கிராம மக்களும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற இதுவரை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை எனக்கூறி நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்கள பந்தலில் ஏராளமான ஆண்களும், பெண்களும் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வடகாட்டை சேர்ந்த சரஸ்வதி (வயது 70), மீனாள் (70), குஞ்சம்மாள் (60), கலா (45), சுமித்ரா (27) ஆகியோர் திடீரென மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த மாட்டோம், வடகாடு, வாணக்கான்காடு, கோட்டைக்காடு, நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை அகற்றிவிடுவோம் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் எழுத்து பூர்வ உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.

இந்நிலையில், நல்லாண்டார்கொல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களிடம் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, போராட்டக்குழுவின் கோரிக்கையான நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைக்கவும், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக நல்லாண்டார்கொல்லை போராட்ட குழுவினர் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து 37 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே வடகாடு போராட்டக்குழுவினருடனும் இன்று கலெக்டர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பிறகு வடகாடு போராட்டமும் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.


Similar News