செய்திகள்

இடைத்தேர்தல் முடிந்தவுடன் திருமங்கலம் - நேரு பூங்கா சுரங்கபாதையில் மெட்ரோ ரெயில்

Published On 2017-03-16 05:30 GMT   |   Update On 2017-03-16 05:30 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தவுடன் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அசோக்நகர்- ஆலந்தூர் இடையே உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரெயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்படுகிறது. சுரங்கப்பாதையில் இதுவரையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

திருமங்கலம்- நேரு பூங்கா இடையே முதல் கட்டமாக சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலை விரைவில் இயக்க நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 7.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளம், மின்கம்பம், மின் வழித்தடம், ரெயில் நிலையங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு தேவையான வசதிகள், மற்றும் இறுதி கட்டப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

சுரங்கப் பாதையில் ரெயிலை இயக்க தேவையான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதால் பாதுகாப்பு சோதனை நடத்தி ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடக்கிறது. 15-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதனால் ஏப்ரல் 2-வது வாரம் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இந்த நேரத்தில் புதிய திட்டத்தை முதல்- அமைச்சரோ, அதிகாரிகளோ தொடங்கி வைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பின்னர் திருமங்கலம்- நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், திருமங்கலம்- நேரு பூங்கா சுரங்கப்பாதையில் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து திறப்பதற்கு தயாராக உள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் ஏப்ரல் இறுதியில் சுரங்கப் பாதையில் சேவை தொடங்கப்படும்.

அதற்கு முன்னதாக பாதுகாப்பு ஆணையர் சோதனை நடத்துவார். இந்த மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் பாதுகாப்பு சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின்னர் கமி‌ஷனரின் ஒப்புதல் பெறப்பட்டு சேவையை தொடங்க முடிவு செய்யப்படும்.

இதுபற்றி மாநில அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் ஒதுக்கும் ஏதாவது ஒரு தேதியில் திருமங்கலம்- நேரு பூங்கா சுரங்கப்பாதை சேவை தொடங்கும் என்றார்.

Similar News