செய்திகள்

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-03-16 00:53 GMT   |   Update On 2017-03-16 00:53 GMT
தமிழக சட்டசபை இன்று கூட இருப்பதையொட்டி, தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபை இன்று கூட இருப்பதையொட்டி, தலைமைச் செயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. காலை 10.30 மணிக்கு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் பல்வேறு மக்கள் நல பிரச்சினைகளை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ப.தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டுவருவதற்கு தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி நடந்த அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்புக்கு முன்பு அவையில் இருந்து தி.மு.க. வினர் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து மறுநாளில், சபாநாயகர் மீது அவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கான கடிதத்தை சட்டசபை செயலகத்தில் தி.மு.க. கொடுத்தது.

சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கான கடிதத்தை அவை விதிப்படி எடுக்க முடியாது என்று கூறப்பட்டதை அடுத்து, கடந்த 9-ந் தேதியன்று, அவை விதி 68-ம் பிரிவை குறிப்பிட்டு மற்றொரு கடிதம் தி.மு.க. சார்பில் சட்டசபை செயலகத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

அந்த விதிப்படி, கடிதம் கொடுக்கப்பட்ட 14 நாட்களுக்கு பிறகு, சபாநாயகரை நீக்கும் தீர்மானம் அவையில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எனவே, வரும் 23-ந் தேதிக்குள் இந்த பிரச்சினை அவையில் எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படு கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் 18-ந் தேதி அரசு மீதான நம்பிக்கை தீர்மானத்தின்போது சட்டசபையின் உள்ளேயும், வெளியேயும் வரலாறு காணாத அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதுபோல இன்று கூடும் பட்ஜெட் கூட்டத்தொடருக்காகவும், சட்டசபை அமைந்துள்ள தலைமைச் செயலகத்தின் உள்ளேயும், வெளியேயும் அதே அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை விதி 68-ல் கூறப்பட்டு இருப்பதாவது:-

சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 179-வது பிரிவு (சி) உட்பிரிவின்படி, தனி தீர்மானம் கொடுக்க விரும்பும் உறுப்பினர் எழுத்து மூலமாக தீர்மான வரைவுடன் சட்டசபை செயலாளருக்கு 14 நாட்கள் முன்னறிவிப்புடன் கொடுக்கவேண்டும். அதன் நகலை சபாநாயகருக்கும் கொடுக்க வேண்டும்.

தனி தீர்மானத்தை முன்மொழிய இருக்கும் எண்ணம் பற்றி செயலாளருக்கு குறைந்தது 14 நாட்கள் முன்னறிவிப்புடன் கொடுக்கப்படாவிட்டால் அதற்கான தனித்தீர்மானம் ஏதும் முன்மொழியக் கூடாது.

சட்டசபையின் 68-ம் விதிப்படி முன்னறிவிப்பு வந்ததும், அந்த தனி தீர்மானத்தை முன்மொழிவதற்காக சட்டசபையின் அனுமதி கோரும் தீர்மானம் ஒன்று அந்த உறுப்பினர் பெயரில், 14 நாட்கள் முன்னறிவிப்பு காலம் முடிவடைந்தவுடன் கூட்டப்பெறும் முதல் கூட்ட நாளில் அலுவல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும். கேள்வி நேரம் முடிந்ததும் இந்த தீர்மானத்தை உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, சபாநாயகரை நீக்க வேண்டும் என்று தி.மு.க. எழுப்பியுள்ள பிரச்சினை 23-ந் தேதியன்று சட்டசபையில் ஆய்வுக்கு எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

Similar News