செய்திகள்

சோழத்தரம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2017-03-13 17:23 IST   |   Update On 2017-03-13 17:23:00 IST
சோழத்தரம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தல் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணம்:

சோழத்தரம் அருகே கொண்டசமுத்திரம் நொச்சிக்காடு பகுதி சுடுகாடு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை விளை நிலங்களாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரியும், அந்த பகுதியில் உள்ள லிங்கப்பன் ஏரியை தூர்வாரக்கோரியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.

ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கை மனு சம்பந்தமாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை கொண்டசமுத்திரம் நான்கு முனை சாலையில் பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், பொதுமக்கள் நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து 9.55 மணி அளவில் போராட்டம் வாபஸ் ஆனது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News