கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்: 3 நாட்கள் நடக்கிறது
புதுக்கோட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயற் குழுக்கூட்டம் மாவட்டத் தலைவர் ச.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கு.சத்தி, மாவட்டச் செயலாளர் பெ.அன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒட்டுமொத்தப் பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வருகின்ற மார்ச்.21,22,23 ஆகிய தேதிகளில் புதுக்கோட்டையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும், இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஊழியர்களைப் பங்கேற்க செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.