மானாமதுரை பகுதியில் வைகையாற்று கரையில் அகற்றப்படாத கருவேல மரங்கள்
மானாமதுரை:
மானாமதுரை அருகே வைகை ஆற்றங்கரை பகுதியில் உள்ள முத்தனேந்தல், இடைக் காட்டூர், சிறுகுடி, பதினெட்டாங்கோட்டை, பச்சேரி, வேம்பத்தூர், மிக்கேல் பட்டணம், புதுக்குளம், பெரியகோட்டை உள்பட சுமார் 50 கிராம பகுதியில் வைகையாற்று பாசனம் போக கிணற்று நீர் பாசனம் மூலம் தென்னை, கரும்பு, நெல், வாழை மற்றும் தோட்ட பயிர்கள், விவசாயம் நடைபெறும் பகுதிகள் ஆகும்.
இப்பகுதி முழுவதும் அடர்ந்த கருவேல மரங்கள் காடுகள் போல் பரவி வளர்ந்து வருகிறது. வைகை ஆற்றின் துணை ஆறான உப்பாற்றில் அதிக அளவு கருவேல மரங்கள் வளர்ந்து வருகிறது. அடர்ந்து வளரும் கருவேல மரங்கள் மூலம் நிலத்தடி நீர் குறைவதாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தெரிவித்தனர்.
வைகையாற்றில் குடிநீர் ஊற்றுகள் வறண்டதால் பல கிராமங்களுக்கு செல்லும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்படாமல் குடிநீர் விநியோகம் நின்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டு விவசாயம் நடைபெறும் வைகையாற்று பகுதியில் உள்ள மேற்கண்ட கிராம பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். உப்பாற்றில் செழித்து வளரும் கருவேல மரங்களையும் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.