செய்திகள்

தஞ்சை - நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Published On 2017-03-08 10:28 IST   |   Update On 2017-03-08 10:28:00 IST
இலங்கை கடற்படையை கண்டித்து தஞ்சை மற்றும் நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகை அக்கரைப்பேட்டை நைனியப்பா நாட்டார் சமுதாய கூடத்தில்நாகை தாலுகா மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நாகூர் மேலத் தெரு, ஆரிய நாட்டுத் தெரு, சாமந்தான் பேட்டை, நம்பியார் நகர், நாகை ஆரிய நாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த கிராம பஞ்சாயத்தார், நாட்டார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பலியானதை கண்டித்தும், தொடர்ந்து மீனவர்களை அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் நாகை தாலுகா மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ள நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கலந்து ஆலோசனை செய்து முடிவு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம்படி நேற்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இன்று 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

இதே போல் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் மல்லிப்பட்டினம் மீனவ சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.


தமிழக கடலோர விசைப்படகு மீனவர் பாதுகாப்பு நல சங்க மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திலும் ராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தங்கச்சி மடம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நாகை புதிய கடற்கரையில் மாணவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கடலில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

அதன் பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News