செய்திகள்

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி

Published On 2017-03-02 16:18 IST   |   Update On 2017-03-02 16:18:00 IST
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் ராஜகோபுரத்தின் வழியாக செல்பவர்கள் சாமிகும்பிட்டு விட்டு திரும்பவும் ராஜகோபுரம் வழியாக வர கோவில் பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக வெள்ளிக்கிழமை முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

ராஜகோபுரம் வழியாக தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் பிற வாயில்கள் வழியாகவும் மேலும் ராஜகோபுரம் வாயில் வழியாகவும் வெளியேறும் நிலை இருந்தது.

ஆனால் தற்போது ராஜகோபுரத்தின் வழியாக செல்பவர்கள் சாமிகும்பிட்டு விட்டு திரும்பவும் ராஜகோபுரம் வழியாக வர கோவில் பாதுகாவலர்கள் அனுமதிப்பதில்லை. பின் கோபுரம் வழியாக வெளியேற அனுமதிக்கின்றனர்.

இதனால் ராஜகோபுர வாயிலில் தங்கள் வாகனங்கள் நிறுத்தி விட்டு வரும் பக்தர்களும் காலணிகளை அங்கே விட்டு விட்டு வருபவர்களும் குறிப்பாக முதியவர்கள் நீண்ட தூரம் நடந்து முன் வாசல் வர வேண்டி உள்ளது.

இதனால் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் தற்போது கோயிலில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணி காரணமாக சாமிதரிசனம் செய்பவர்கள் வெளிபிரகாரத்தை வலம் வர முடியாத நிலை உள்ளதால் பக் தர்கள் மனவேதனை அடைந்துள்ளனர்.

சாமிகும்பிட்ட உடன் கோவிலை சுற்றிவந்து கொடி மரத்தின் அருகே சிறிது நேரம் அமர்ந்து அம்மனை மனதிற்குள் வழிபடுவோம்.

ஆனால் தற்போது சாமிகும்பிட்ட உடன் கோவிலை வலம் வரமுடியவில்லை. மேலும் இங்கு பணியில் உள்ள தனியார் பாதுகாவலர்கள் பக்தர்களிடம் அதட்டலாகவும், மிரட்டலாகவும் பேசுகின்றனர். பக்தர்களிடம் மரியாதை குறைவாக பேசுகின்றனர். வயதான பக்தர்களிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கின்றனர்.

தினந்தோறும் லட்சகணக்கான பக்தர்கள் கூடும் திருமலையிலேயே கோவிலை வலம் வரமுடியும் நிலையில் காமாட்சியம்மன் கோயிலை வலம் வர முடியாத நிலை உள்ளது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News