செய்திகள்

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு தீபா பேரவையினர் எதிர்ப்பு

Published On 2017-02-26 17:37 GMT   |   Update On 2017-02-26 17:37 GMT
அமைச்சர் எம்.சி.சம்பத், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா பேரவையினர் கருப்பு கொடி காட்டினர்.

கடலூர்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு வாக்களித்தனர். இதையடுத்து அந்த எம்.எல்.ஏ.க்கள் தொகுதிக்கு வந்தபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே போலீஸ் பாதுகாப்புடன் அரசு நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.

கடலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தொழில்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓட்டளித்தார். இதை அறிந்த தொகுதி மக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று கடலூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தார். காலை 10 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள்தொடர்புதுறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அரசு சாதனை விளக்க புகைப் பட கண்காட்சியை அமைச்சர் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அமைச்சர் எம்.சி.சம்பத் புகைப்பட கண்காட்சியை பார்வையிட வரவில்லை. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வடலூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரவு அவர் மீண்டும் கடலூர் வந்து சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

இதைத்தொடர்ந்து இன்று காலை கடலூர் புதுப்பாளையத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மகன் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அமைச்சர் சம்பத் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த கடலூர் தீபாபேரவையினர் அவருக்கு கருப்புகொடி காட்ட முடிவு செய்தனர்.

புதுப்பாளையம் மெயின்ரோட்டில் தீபாபேரவையினர் சுகுணன் தலைமையில் அங்கு திரண்டனர். அமைச்சர் வரும்போது கருப்புகொடி காட்டுவதற்கு அவர்கள் தயாராக நின்றனர். தகவல் அறிந்த அமைச்சர் எம்.சி.சம்பத் அ.தி.மு.க. பிரமுகர் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார். சற்றுலா மாளிகையிலேயே தங்கினார்.

அமைச்சர் எம்.சி.சம்பத் வரவில்லை என்பதை அறிந்த தீபாபேரவையினர் ஆத்திரமடைந்தனர். சசிகலா ஆதரவு முதல்-அமைச்சருக்கு வாக்களித்த அமைச்சர் எம்.சி.சம்பத் பதவி விலகவேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி இல்லை. இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று தீபா பேரவையினரை எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அமைச்சருக்கு எதிராக தீபாபேரவையினர் கருப்புகொடி காட்ட திரண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News