செய்திகள்

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2017-02-25 16:48 IST   |   Update On 2017-02-25 16:47:00 IST
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்துள்ளார்.
நெடுவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள், சமூக அமைப்பினர், பல்வேறு கட்சியினர், மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நெடுவாசலுக்கு நேரிடையாக சென்று பொதுமக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நெடுவாசலில் போராட்டம் நடத்தி வரும் மக்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி செந்தில்நாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆகிய மூவரும் நேரிடையாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் "அதிமுக அரசுதான் மீத்தேன் திட்டத்தை எதிர்த்தது. அதிமுக அரசு எப்போதும் விவசாயிகளின் நலன் காப்பதில்தான் முனைப்பு காட்டி வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு செயல்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தில் தமிழக அரசு மவுனம் காக்கவில்லை. பிரதமரை சந்திக்கும்போது ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து தமிழக முதல்வர் முறையிடுவார்" என்றார்.




அமைச்சருடன் உடன் சென்ற அதிமுக எம்.பி செந்தில்நாதன் மக்களின் எண்ணத்தை நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பேன்
என்றும், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சினை குறித்து பேசுவேன் எனவும் உறுதியளித்துள்ளார்.

மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் முன்னர் ஓஎன்ஜிசி அமைத்துள்ள ஆழ்துளைக் கிணற்றை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Similar News