வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்து மூடியதாக வரலாறு.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா 28 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு மாசிமகப் பெருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி 3-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை பஞ்சமூர்த்திகள் எழுந்தருள கோவில் கொடிமரத்தில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி மணவழகன், யாழ்பாணம் பரணீஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஸ்தலத்தார்க் கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன், உப்பு உற்பத்தியாளர் எஸ்.கே.எம்.எஸ். குரூப் மாரியப்பன், உபயதாரர்கள் எழிலரசு, அம்பிகாதாஸ், சங்கரவடிவேலு உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.