செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அதிரடி அரசியலில் குதிக்கும் தீபா

Published On 2017-02-21 14:55 IST   |   Update On 2017-02-21 14:55:00 IST
ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓ.பன்னீர்செல்வம், தீபா இருவரும் ஒன்றாக பங்கேற்கிறார்கள்.
சென்னை:

தமிழக அரசியல் களத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டுகள் அதிர வைத்தன.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிலர் களம் இறங்கினர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என 2 அணிகள் உருவானது.

அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் மீதான மேல் முறையீட்டில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிறை சென்றார். புதிய முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.

இந்நிலையில் அரசியல் களத்தில் தனியாக நின்று கொண்டிருந்த தீபா, திடீரென ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தோடு இணைந்து அ.தி.மு.க.வில் இரு கரங்களாக செயல்பட போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம், தீபா இருவரும் இணைந்து தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பான ஏற்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் செய்து வருகிறார்கள்.


ஓ.பி.எஸ்., தீபா ஆகியோரின் இந்த புதிய கூட்டணி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனை பூர்த்தி செய்யும் வகையில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி இந்த கூட்டம் நடக்கிறது. இதில் ஓ.பன்னீர்செல்வம், தீபா இருவரும் ஒன்றாக பங்கேற்கிறார்கள். இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று திரட்டி பங்கேற்க வைக்க ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது, மாவட்டங்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தின்போது, தீபா பேரவையினருடன் கலந்து ஆலோசிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன் மூலம் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு பின்னர் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.நகரில் உள்ள தீபா வீட்டில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் இன்று நடந்தது. தீபாவின் கணவர் மாதவன் தொடங்கி வைத்தார்.

கோபிநாத், டாக்டர் யுவராஜ், பம்மல் சீனிவாசன், சுகுமார், பாலாஜி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News