செய்திகள்

சிவகங்கையில் கத்திமுனையில் வாலிபருக்கு மிரட்டல்: ரவுடிகள் உள்பட 4 பேர் கைது

Published On 2017-02-16 15:58 IST   |   Update On 2017-02-16 15:58:00 IST
மோட்டார் சைக்கிள் திருட முயன்றதாக தடுத்த வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியதாக 2 ரவுடிகள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

சிவகங்கை தாலுகா இடையமேலூரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் தற்போது சிவகங்கை பாரதியார் நகரில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு தனக்கு சொந்தமான ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு முருகன் நிறுத்தியிருந்தார். அதனை சிலர் திருட முயற்சித்துள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு முருகன், வீட்டிற்கு வெளியே வந்தபோது 5 பேர் சைக்கிளை திருட முயற்சிப்பது தெரியவந்தது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டினார்களாம்.

இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் கூச்சலிட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்களை கண்டதும் 5 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் 4 பேரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். ஒருவன் மட்டும் தப்பி ஓடிவிட்டான்.

இதனைத் தொடர்ந்து பிடிபட்ட 4 பேரும், சிவகங்கை டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் மோகன் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினார். இதில் அவர்களது பெயர் வீரவலசை பிரபு (38). கந்தசாமி (37), மணிகண்டன் (28), அய்யப்பன் (24) என்பதும் தப்பி ஓடியவன் பெயர் ராஜசேகர் என்பதும் தெரியவந்தது. மேலும் பிரபு, அய்யப்பன் ஆகியோர் பிரபல ரவுடிகள் என்பதும் அவர்கள் மீது பல வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

Similar News