செய்திகள்

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-02-14 09:21 GMT   |   Update On 2017-02-14 09:21 GMT
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பையொட்டி தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி:

திருச்சி மாவட்டத்திலும் நள்ளிரவு முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் 13 போலீஸ் நிலையங்கள் உள்பட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் நேற்று இரவு முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் கட்சி பிரமுகர்கள் தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் இல்லம், அரசியல் கட்சி அலுவலகங்கள், தலைவர்கள் சிலைகள் உள்ள பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி தில்லைநகர், சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் எம்.எல்.ஏ. எம்.பி. அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதே போன்று திருச்சி புறநகர் மாவட்டத்தில் திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, மணப்பாறை சட்ட மன்ற உறுப்பினர்கள் அலுவலகங்கள், கட்சி பிரமுகர்கள் இல்லங்கள், அலுவலகங்கள், தலைவர்கள் சிலைகள், பஸ் நிலையங்கள் போன்ற இடங்களுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மத்திய மண்டலத்தில் மட்டும் 156 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாநகரில் 22 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு சந்தேகத்திற்கிடமான ஆசாமிகள் மாநகரில் ஊடுருவி உள்ளார்களா? என்றும் சோதனை நடந்தது.

அனைத்து ஓட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது. இதேபோன்று அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் இல்லங்கள், அலுவலகங்கள் ஆகியவை உள்ள இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்து சென்று பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் 350 மாவட்ட போலீசார், 75 ஆயுதப்படை போலீசார், 65 தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையை சேர்ந்தவர்கள் என மொத்தம் 490 போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியான பஸ் நிலையங்கள் மற்றும் நகரத்தை இணைக்கும் சாலைகள், இணைப்பு பாதைகளான காந்திகிராமம், தாந்தோன்றிமலை, வேலாயுதம் பாளையம், குளித்தலை, அரவக்குறிச்சி உள்பட பல பகுதிகளிளும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கரூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையங்கள், தலைவர்கள் சிலை உள்ள இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News