செய்திகள்

ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 20 பவுன் நகை பறிப்பு

Published On 2017-02-11 08:16 GMT   |   Update On 2017-02-11 08:16 GMT
ஓடும் ரெயிலில் ஆசிரியையிடம் 20 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை ரெயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

தெலுங்கானா மாநிலம் குண்டூர் மாவட்டம், பக்டலாமண்டலம் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு. இவருடைய மனைவி அனுராதா (வயது 42), ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்கள் சாவித்திரி, புஷ்பா.

கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தங்களது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக அனுராதா, சாவித்திரி, புஷ்பா ஆகிய 3 பேரும் தெலுங்கானா மாநிலம் ஸ்ரீராலாவில் இருந்து பாலக்காடு நோக்கி ஐதராபாத் - பாலக்காடு செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.7 பெட்டியில் பயணம் செய்தனர்.

இந்த ரெயில் நேற்று இரவு காட்பாடி - ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அனுராதா கையில் இருந்த பையை மர்ம நபர் ஒருவர் பறித்துக் கொண்டு, ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். அந்த பையில் 20 பவுன் நகை, ஏ.டி.எம். கார்டு, ஆதார் அட்டைகள், செல்போன் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அனுராதா ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.

Similar News