செய்திகள்

பொறையாறு அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: குடிசை தீப்பிடித்து எரிந்தது

Published On 2017-02-05 21:10 IST   |   Update On 2017-02-05 21:10:00 IST
பொறையாறு அருகே பா.ஜனதா பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது.

தரங்கம்பாடி:

நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள ஒழுகைமங்கலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பாலாஜி குருக்கள் (வயது 45). இவர் செம்பனார்கோவில் ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். இவர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குருக்களாகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு பாலாஜிகுருக்கள் வீட்டில் படுத்து தூங்கினார். அப்போது நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பாலாஜி குருக்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் குறி தவறிய பெட்ரோல் குண்டுகள் அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டில் விழுந்து தீப்பிடித்தது. இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் பொறையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News