செய்திகள்

செம்பனார்கோவில் அருகே கோவிலில் அம்மன் நகை திருட்டு: மர்ம நபருக்கு வலைவீச்சு

Published On 2017-02-04 17:46 IST   |   Update On 2017-02-04 17:46:00 IST
செம்பனார்கோவில் அருகே கோவிலில் அம்மன் நகையை மர்ம நபர் திருடிச்சென்றது குறித்து ஊர்மக்கள் போலீசில் புகார் செய்தனர்.

தரங்கம்பாடி:

செம்பனார்கோவில் அடுத்த மேமாத்தூர் கிராமம் மெயின்ரோடு அருகே வெள்ளாயர் தெருவில் ஒரு சிவன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் நேற்றிரவு வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு குருக்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நள்ளிரவில் கோவிலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் சுற்றி அடைக்கப்பட்டிருந்த வேலியை பிரித்துக் கொண்டு கோவிலுக்குள் புகுந்துள்ளான்.

பின்னர் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர் கோவிலுக்குள் நகை, பொருட்களை தேடிப்பார்த்தும் எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்துள்ளான்.

இதையடுத்து அங்கிருந்த அம்மன் சிலையின் கழுத்தில் தங்கத்தால் ஆன தாலி இருப்பதை பார்த்த அவன் அதனை திருடிக்கொண்டு வெளியில் வந்துள்ளான். அப்போது ஏற்பட்ட சத்தத்தை கேட்டு கோவில் குருக்கள் அங்கு வந்து பார்த்துள்ளார்.

மர்மநபர் ஒருவன் கோவிலில் இருந்து வெளியில் வருவதைப்பார்த்து அவர் சத்தம் போட்டார். இதைக்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தபோது மர்மநபர் அங்கிருந்து இருட்டிற்குள் தப்பியோடி மறைந்தான். பின்னர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் இருந்த ½ பவுன் தாலியை மர்மநபர் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து ஊர்மக்கள் செம்பனார்கோவில் போலீசில் இதுபற்றி புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News