செய்திகள்

எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணியில் உதவிய மாணவர்களுக்கு நன்றி தெரிவித்த கட்காரி

Published On 2017-02-04 09:14 GMT   |   Update On 2017-02-04 09:14 GMT
எண்ணூரில் கப்பல்கள் மோதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று கூறிய மத்திய மந்திரி நிதின் கட்காரி, எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் உதவி செய்த மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஈரோடு:

எண்ணூர் துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில், எண்ணெய்க் கப்பலில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதன் காரணமாக, எண்ணூர் தொடங்கி திருவான்மியூர் வரை கிழக்கு கடற்கரைபகுதியில் எண்ணெய் படலம் பரவி பெருமளவில் மாசு ஏற்படுத்தி உள்ளது. எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை உள்ளதால், இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எண்ணூர் துறைமுகத்தில் பரவியுள்ள 60 டன் எண்ணெய் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்ள்ளதாகவும், எஞ்சிய 20 டன் கழிவுகளை அகற்றும் பணி இன்று மாலைக்குள் நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் என்றும் அமைச்சர் கருப்பண்ணன் கூறினார்.

இதற்கிடையே, கப்பல்கள் மோதல் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணைக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். மேலும், கடலில் பரவியுள்ள எண்ணெய் கழிவினை அகற்றும் பணியில் உதவி செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கட்காரி நன்றி தெரிவித்தார்.

Similar News