செய்திகள்
செந்துறை அருகே கோவிலில் சாமி சிலை கொள்ளை
செந்துறை அருகே பச்சையம்மன் கோவிலில் பூட்டை உடைத்து சாமி சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுகடம்பூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கலியபெருமாள் கோவிலில் பூஜையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று அதிகாலை அவர் கோவிலில் பூஜை செய்ய வந்தபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த வெண்கலத்தால் ஆன 3 அடி உயர பச்சையம்மன் சாமி சிலையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கலியபெருமாள் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.