பூம்புகார் அருகே வீட்டில் தீ விபத்து: கணவன்-மனைவி உள்பட 4 பேர் படுகாயம்
சீர்காழி:
நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள புதுகுப்பத்தை சேர்நதவர் கலிய மூர்த்தி (வயது 36). இவரது மனைவி இளமதி (32). இவர்களுக்கு4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று கலியமூர்த்தி குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார். இளமதி வீட்டில் இருந்த மண்எண்ணை விளக்கை ஏற்றினார். அவர் எரியும் விளக்கில் கேனில் இருந்த மண்எண்ணையை ஊற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக விளக்கின் தீப்பொறி கையில் பட்டதால் மண்எண்ணை கேன் தவறி விழுந்தது. இதில் இளமதியின் சேலையில் தீப்பிடித்தது.
இதனை கண்ட கலியமூர்த்தி தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பிடித்தது. மேலும் வீட்டிலும் தீ பரவியது. இந்த தீ விபத்தில் குழந்தைகள் முகிலன்(8), விக்னேஷ்(5) ஆகியோரும் காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தீயை அணைத்து தீக்காயம் அடைந்த கணவன்-மனைவி உள்பட 4 பேரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இளமதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக பூம்புகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுகுப்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.