செய்திகள்
அரியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
அரியலூர் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தா.பழுர்:
அரியலூர் மாவட்டம் தா.பழுர் அருகே உள்ள காரைகுறிச்சி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமம் அருகில் மணல் குவாரி உள்ளது. இங்கிருந்து சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு ஊர் அருகே உள்ள சாலை மூலம் மணல் லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி காரைகுறிச்சி கிராம பொதுமக்கள் 25 பேருக்கு மேற்பட்டோர் தா.பழுர்- கும்பகோணம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழுர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.