செய்திகள்
திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
திருப்போரூர் அருகே குளத்தில் மூழ்கி பலியான விக்ரம் உடலை சிறுசேரி தீயணைப்புத் துறையினர் இரவு 10 மணி அளவில் மீட்டனர்.
திருப்போரூர், பிப். 2-
சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் விக்ரம் (வயது 18).
இவர் ஏகாட்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆர்கிடெக் படித்து வருகிறார். நேற்று கல்லூரிக்கு வந்த அவர் கல்லூரிக்கு செல்லாமல் நண்பர்கள் 5 பேருடன் அருகே உள்ள நத்தம் பகுதிக்கு சென்றார். பின்னர் அங்குள்ள குளத்தில் விக்ரம் நண்பருடன் குளித்தார். இருவரும் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு நீந்தி சென்றனர். பாதி தூரத்திற்கு மேல் நீந்த முடியாமல் விக்ரம் தண்ணீரில் மூழ்கினார். அவரை கரையில் இருந்த நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
சிறுசேரி தீயணைப்புத் துறையினர் குளத்தில் மூழ்கிய விக்ரம் உடலை தேடினர். இரவு 10 மணி அளவில் அவரது உடலை மீட்டனர்.