செய்திகள்

ஊருக்குள் புகுந்த கரடி குட்டியை தொட்டில் கட்டி காட்டில் கொண்டு விட்டனர்

Published On 2017-02-01 21:45 IST   |   Update On 2017-02-01 21:45:00 IST
கடம்பூர் வனப்பகுதி தொண்டூர் வனக்கிராமத்தில் நேற்று முன் தினம் சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடி குட்டி புகுந்தது.அந்த குட்டியை காட்டுக்குள் கொண்டு போய் விட்டனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதி தொண்டூர் வனக்கிராமத்தில் நேற்று முன் தினம் சுமார் 4 வயது மதிக்கத்தக்க கரடி குட்டி புகுந்தது.

அப்பகுதியில் உள்ள குட்டை அருகே படுத்துக்கொண்ட அந்த கரடி காட்டுக்குள் போக மறுத்தது.

பொதுமக்கள் பல்வேறு வகைகளில் காட்டுக்குள் விரட்ட எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதையொட்டி வனக் கிராம மக்கள் சத்தியமங்கலம் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

வனத்துறையினரும் அந்த கரடி குட்டியை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அந்த கரடியோ காட்டுக்குள் போக அடம் பிடித்தது. மேலும் அந்த கரடி உடல் நலம் குன்றி போயும் இருந்தது.

இதனால் மயக்க ஊசி போட்டு பிடிக்க முதலில் முடிவு செய்த வனத்துறையினர் பிறகு உடல்நலம் குன்றி இருந்த கரடி குட்டியை வேறு வகையில் பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி ஒரு பெரிய தார்பாய் மூலம் வனத்துறையினர் கரடிகுட்டி மீது பாய்ந்து தார்பாயை அதன் மீது போட்டு அமுக்கி பிடித்தனர். பிறகு கால்களை கயிறு மூலம் கட்டினர்.

தொடர்ந்து ஒரு மூங்கில் மரத்தில் தொட்டில் அமைத்து அதில் அந்த கரடி குட்டியை கட்டி வனத்துறையினர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றனர்.

மல்லியம்மன் வர்க்கம் வனப்பகுதியில் இறக்கி கால்களின் கட்டை அவிழ்த்து அந்த காட்டுக்குள் கரடியை விட்டு விட்டு வந்து விட்டனர்.

Similar News