செய்திகள்

தமிழ்நாட்டில் காலூன்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு பா.ஜனதா நெருக்கடி கொடுக்கிறது: திருநாவுக்கரசர்

Published On 2017-01-30 08:33 GMT   |   Update On 2017-01-30 08:33 GMT
தமிழ்நாட்டில் காலூன்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாரதிய ஜனதா நெருக்கடி கொடுத்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:

காந்தி நினைவு தினத்தையொட்டி சத்தியமூர்த்தி பவனில் இன்று அவரது உருவப்படுத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசு கொண்டு வரும் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழகத்தில் அமல்படுத்தினால் ஏழை, எளிய பின் தங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

முதலில் மாணவர்கள் கல்வி தரத்தையும், திறனையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டத்தில் தி.மு.க. வன்முறையை தூண்டியதாக முதலில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இப்போது நடராஜன் கூறி இருக்கிறார். அது தவறு. மாணவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக போலீசார் திட்டமிட்டு வன்முறையை ஏவினார்கள்.

தமிழ்நாட்டில் பயங்கரவாதம் ஊடுருவி விட்டதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் மத்திய அரசு உளவு துறை மூலம் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டியதுதானே?

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில நடவடிக்கைகள் பாராட்டும்படியாக உள்ளன. ஆனால் அவருக்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக  ஆட்சியின் மூலமாகவும், தீபா மூலமாகவும் பா.ஜனதா நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.

அ.தி.மு.க.வில் அவருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதெல்லாம் அவர்களது உள்கட்சி பிரச்சினை. யாரை எங்கே உட்கார வைக்க வேண்டும் என்பதெல்லாம் அவர்கள் சார்ந்த வி‌ஷயம். ஆனால் அவர் ஒரு முதல்-அமைச்சர். அவருக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அவருக்கு முக்கியமான சிரமம் டெல்லி நெருக்கடிதான்.

வறட்சி மற்றும் வார்தா புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

Similar News