செய்திகள்

காரைக்குடி அருகே சிராவயலில் மஞ்சுவிரட்டு 20 பேர் படுகாயம்

Published On 2017-01-29 15:31 IST   |   Update On 2017-01-29 15:31:00 IST
சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள திருப்பத்தூரை அடுத்த சிராவயலில் ஆண்டுதோறும் உலகப்புகழ் பெற்ற மஞ்சுவிரட்டு நடத்தப்படுவதுண்டு. இந்த ஆண்டு இன்று காலை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

வேலுச்சாமி அம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், சிராவயலைச் சேர்ந்தவருமான சரத்குமார் தொடங்கி வைத்தார். முதல் கோவில் மாட்டை கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்து அவிழ்த்து விட்டனர்.

அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர். சில காளைகளை இளைஞர்கள் மடக்கிப்பிடித்தனர். காளைகளை அடக்க முயன்ற 20 பேர் படுகாயம் அடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டன.

மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி, செந்தில்நாதன் எம்.பி., பெரியகருப்பன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, கோட்டாட்சியர் அல்பிஜான், வர்க்கீஸ், சங்கராபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மாங்குடி மற்றும் கிராம மக்கள் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், திருப்பத்தூர் துணை கண்காணிப்பாளர் முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சேதுநாராயண புரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்றும், அதன் திமில்களை பிடித்தும் அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Similar News