செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலி

Published On 2017-01-28 10:43 GMT   |   Update On 2017-01-28 10:43 GMT
பட்டுக்கோட்டை அருகே மண் சரிவில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு பகுதியில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள மோட்டார் பம்ப் பழுதானதை தொடர்ந்து சுந்தர்ராஜ் (வயது 48), முருகன் (வயது 52), மற்றும் நாடிமுத்து (வயது 45) ஆகியோர் மோட்டாரினை வெளியில் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சுந்தர்ராஜ் மற்றும் முருகன் இருவரும் தரைத்தளத்தில் இருந்தபடி மோட்டார் பைப்பினை வெளியில் எடுத்த போது 25 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் இறங்கி பழுதான மோட்டார் பம்பினை வெளியில் எடுக்கும் பணியினை நாடிமுத்து செய்துள்ளார். அப்போது கடந்த இரண்டு நாட்களாக பட்டுக்கோட்டை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூமி முழுவதும் ஈரமாக இருந்த நிலையில் பள்ளத்தில் இருந்த நாடிமுத்து மீது மண் சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதைந்துபோனார்.

அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை தீயணைப்புத்துறையினர் தனியார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராமத்தினர் உதவியுடன் மண்ணுக்குள் 25 ஆடி ஆழத்தில் புதைந்தவரை வெளியில் எடுத்தனர். அங்கு வந்திருந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் நாடிமுத்துவை பரிசோதனை செய்த போது இறந்தது தெரிந்தது. இதைத்தொடர்ந்து நாடிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு சரோஜா என்ற மனைவியும், 3 மகள், 6 மகன்கள் என 9 பிள்ளைகள் உள்ளனர்.

பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. கோவிந்ராஜ், தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் கூடுதல் சூப்பிரண்டு அரவிந்த் மேனன், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி மில்கி ராஜா தலைமையில் தீயணைப்புத் துறையினர் உள்பட அரசு துறை அதிகாரிகள் பலரும் வந்திருந்தனர்.

Similar News