செய்திகள்

பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: காளைகள் முட்டியதில் 10 வீரர்கள் காயம்

Published On 2017-01-27 12:12 IST   |   Update On 2017-01-27 12:12:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரசலூரில் நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 10 வீரர்கள் காயமடைந்தனர்.
வேப்பந்தட்டை:

ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கிய பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அரசலூரில் நடைபெற்றது. இதனை பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த தடை வருவதற்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் ஊராட்சியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதால் காளைகளை வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும், பொதுமக்களும் மிகுந்த வேதனையடைந்தனர். அதன்பிறகு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி அந்த பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான தடையை நீக்கி சட்டம் இயற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சி அரசலூரில் ஜல்லிக்கட்டு விழா நடத்த விழா குழுவினரும், பொது மக்களும் ஏற்பாடு செய்தனர். அதற்கான அனுமதி மாவட்ட நிர்வாகத்திடம் கோரப்பட்டது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடக்கும் வாடி வாசல் பகுதியை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் பேபி, போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக்கேயன், வேப்பந்தட்டை தாசில்தார் மனோன்மணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் முழு பரிசோதனையும், மாடுபிடி வீரர்களுக்கு அரசு டாக்டர்களை கொண்டு முறையான மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதில் அன்னமங்கலம், தொண்ட மாந்துறை, விசுவக்குடி, முகமதுபட்டினம், திருச்சி மாவட்டம் இருங்கலூர், ஈச்சம்பட்டி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூடமலை, ஆத்தூர், கெங்கவல்லி, மங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. போட்டி தொடங்கியதும் வாடி வாசலில் இருந்து காளைகள் திறந்து விடப்பட்டது. சீறி வந்த காளைகளை 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் அடக்கினர்.

இதில் காளைகள் முட்டியதில் 10 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிக்சையளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

விழாவில் அன்னமங்கலத்தை சேர்ந்த செவத்தியார் என்பவருக்கு சொந்தமான காளை வேகமாக ஓடியதில் மரத்தில் மோதி காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் மாடுபிடி வீரர்களையும், பொதுமக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விழாவில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.

பாதுகாப்பு பணிகளில் அரும்பாவூர் போலீசார் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிய பிறகு பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் முதல் ஜல்லிக் கட்டு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News