செய்திகள்

குடியரசு தின விழாவில் ரூ.5 லட்சம் நலத்திட்ட உதவிகள்: தேசியக் கொடியேற்றி கலெக்டர் வழங்கினார்

Published On 2017-01-26 13:45 GMT   |   Update On 2017-01-26 13:45 GMT
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
நாகர்கோவில்:

நாடு முழுவதும் இன்று 68-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் குடியரசு தின விழா நடந்தது. விழாவில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பங்கேற்று  தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க் காவல் படையினர், என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் பலூன்களை வானில் பறக்கவிட்டார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கம்  வழங்கும் விழா நடந்தது. சிறப்பாக பணியாற்றிய 45 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கி போலீசாரை பாராட்டினார்.

பின்னர்  சமூக பாதுகாப்பு திட்டம், ஆதி திராவிடர் நலத்துறை, தோட்டக்கலை, வேளாண்மைத்துறை என பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மொத்தம் 58 பேருக்கு ரூ.5 லட்சத்து 14 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ்கள், கொடி நாள் வசூலில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், சமூக பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது. 5 பள்ளிகளைச் சேர்ந்த 395 மாணவ-மாணவிகள் பங்கேற்று கலைநிகழ்ச்சியை நடத்தினர்.

விழாவில் போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், கலெக்டரின் மனைவி மாயாசவான், வருவாய் அதிகாரி இளங்கோ, ஆர்.டி.ஓ. ராஜ்குமார், ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி  கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணை முதல்வர் லியோ டேவிட், வன அதிகாரி விஸ்மி விஸ்வநாதன், துணை தாசில்தார் கண்ணன், திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, தோவாளை தாசில்தார் முத்துலட்சுமி, ஏ.எஸ்.பி.க்கள் சாய்சரண், அபினவ், ஏ.டி.எஸ்.பி. அதிவீரபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News