செய்திகள்
திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் கடும் குடிநீர் கட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
திருப்புவனத்தில் கடந்த 1 மாதமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. திருப்புவனம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் பேரூராட்சியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குரிய குடிநீர் வைகை ஆற்றிலிருந்து விநியோகம் செய்து வந்துள்ளனர். வைகை ஆற்றில் லாரி, லாரியாக மணல் அள்ளியதால் நிலத்தடி நீர் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திருப்புவனத்திலிருந்து அருப்புக்கோட்டைக்கு தினமும் சுமார் 5 லட்சம் லிட்டர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 16வது வார்டில் கடந்த 1 மாதமாக குடிநீர் கிடைக்காததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாக அதிகாரியை பார்க்கச் சென்றால் அதிகாரி சிவகங்கை போய்விட்டதாக தெரிவிக்கிறார்கள்.
16வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.