செய்திகள்

சிதம்பரத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்: எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது

Published On 2017-01-20 10:54 GMT   |   Update On 2017-01-20 10:54 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிதம்பரத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிதம்பரத்தில் இன்று தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் காந்தி சிலை அருகே தி.மு.க.வினர் திரண்டனர்.

முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் ரெயில் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.

ஊர்வலத்தில் துரை.சரவணன் எம்.எல்.ஏ. நகரசெயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் தங்க.ஆனந்தன், மாமல்லன், மதியழகன், மனோகரன், முத்துப்பெருமாள், முத்து சாமி, சபாநாயகம், சோழன், திருமாவளவன், ராயர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி கேயன், துணை அமைப்பாளர் அப்பு சத்யநாராயணன், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பால சுப்பிரமணியன், நகர பொருளாளர் ஜாபர் அலி, அப்புசந்திரசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ரெயிலை மறிக்க சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விருத்தாசலத்திலும் இன்று தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். விருத்தாசலம் பஸ்நிலையம் அருகே இருந்து ரெயில் நிலையத்துக்கு தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர்.

கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் வந்தவர்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்குள் சென்று ஆர்பாட்டம் செய்தனர். அங்கு வந்த ரெயில் என்ஜினை மறித்து கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து நாச்சியார்பேட்டை ரெயில்வே கேட் அருகே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதை அறிந்த தி.மு.க.வினர் அங்கு சென்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் கணேசன், சபா.ராஜேந்திரன் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News