அரியலூர் அருகே வாலிபருக்கு கத்தி குத்து: 3 பேர் கைது
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் பிரபு (வயது 36). அதே பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மகன் பிரபு (38). இவர்கள் இருவருக்கும் கடந்த புத்தாண்டு அன்று தராறு ஏற்பட்டது. இதனால் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கராசு மகன் பிரபு மற்றும் நண்பர்கள் விஜய்(21), விணோத் (26), ராஜா(46) ஆகியோர் குணசேகரன் மகன் பிரபுவை கத்தியால் குத்தி தப்பி சென்றனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த பிரபுவை 108 அம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பிரபு மனைவி பானு உடையார் பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் வழக்குபதிவு செய்து பிரபுவை கத்தியால் குத்திய விஜய், விணோத், ராஜா ஆகியோரை கைது செய்தார். மேலும் தலைமறைவான பிரபு மற்றும் சக நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.