செய்திகள்

வறட்சியை சமாளிக்க ரூ.39565 கோடி நிவாரணம் வேண்டும்: பிரதமரிடம் தமிழக அரசு மனு

Published On 2017-01-16 11:13 GMT   |   Update On 2017-01-16 11:13 GMT
வறட்சியை சமாளிக்க ரூ.39565 கோடி நிவாரணம் தேவை என்றும், உடனடி நிவாரணமாக 1000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் தமிழக அரசு மனு அளித்துள்ளது.
சென்னை:

பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. விளைச்சல் இல்லாமல் பயிர்கள் கருகியதைக் கண்டு பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். எனவே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து வறட்சி நிலை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு மாநிலம் முழுவதும் பார்வையிட்டு, அதன் அடிப்படையில் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் வழங்கப்பட்டது.

இந்த விரிவான அறிக்கையுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் இன்று பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த மனுவை முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் மாநில மீட்ப்புப்பணிகள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய்த்துறை செயலாளர் சந்திர மோகன் ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் வழங்கினர்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக  முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் பிரதமர் அலுவலகத்தில் இன்று மனு வழங்கபட்டது. இந்த மனுவை முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில் மாநில மீட்ப்புப்பணிகள் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார். இதே போன்றதொரு மனு மத்திய விவசாயத் துறை செயலரிடமும் வழங்கப்பட்டது.

இந்த மனுவில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை மத்திய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வறட்சியை சமாளிக்க மொத்தம் ரூ.39,565 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் விளைபயிர்கள் பாதிப்பு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு போன்ற நிலைமைகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

மேலும் தமிழகத்தில் பெய்த மழை அளவு, நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் இருப்பு உள்ளிட்ட விவரங்களையும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News