செய்திகள்

ஜல்லிக்கட்டுக்காக பா.ஜ.க. உண்மையாக போராடி வருகிறது: எச்.ராஜா

Published On 2017-01-16 09:45 IST   |   Update On 2017-01-16 12:09:00 IST
ஜல்லிக்கட்டுக்காக பாரதிய ஜனதா கட்சி உண்மையாக போராடி வருகிறது என்று அதன் தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது சொந்த காளையை சீரணி அரங்கம் முன்பு அவரே அழைத்து வந்து அவிழ்த்து விட்டார். அதனை பிடிக்க ஏராளமான இளைஞர்கள் விரட்டி சென்றனர். எச். ராஜாவின் இந்த செயலால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் பாரத நாடு பழம் பெருமையான நாடு. இங்கு விவசாயம் தான் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்துக்கு பல்வேறு வகையிலும் மாடுகள் உதவியாக இருந்து வருகின்றன. ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்க வேண்டும், இதற்காக பாரதிய ஜனதா கட்சி உண்மையாக போராடி வருகிறது. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார்கள். ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அவசர சட்டம் கொண்டு வரமுடியாது. சட்டம் படித்தவர்களுக்கு இது தெரியும்.

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. அன்றைக்கு சரி, இன்றைக்கும் சரி ஜல்லிக்கட்டுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவாக இருக்கும். ஜல்லிக்கட்டு பிரச்சனையில் சிலர் தனி தமிழ்நாடு கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு பிரச்சனையை திரைத்துரையினர் தூபம் போட்டு வளர்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News