செய்திகள்

நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற இந்து முன்னணி பிரமுகர் கைது

Published On 2017-01-15 15:36 IST   |   Update On 2017-01-15 15:36:00 IST
அரியலூர் அருகே நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கற்பழித்து கொன்ற இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் இறந்து விட்டார். இவரது மகள் நந்தினி (வயது 17), கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வந்தார்.

இவருக்கும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வயது (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இருவரும் செல்போனில் பேசி பழகி உள்ளனர். நாளடைவில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26-ந்தேதி நந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரது தாயார் ராஜகிளி நந்தினியை பல இடங்களில் தேடினார். ஆனாலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே நந்தினியை அவருடன் பழகிய மணிகண்டன் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்டார்.

இது குறித்து கடந்த மாதம் 29-ந்தேதி ராஜகிளி இரும் புலிகுறிச்சி போலீசில் கீழமாளிகை மணிகண்டன் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார்

இதைத்தொடர்ந்து போலீசார் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர். ஆனால் மணிகண்டன் தனக்கும் நந்தினி மாயமானதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். இதனால் போலீசார் மணிகண்டனை விடுவித்தனர்.

தொடர்ந்து நந்தினியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் 2 வாரங்கள் ஆகியும் நந்தினி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று (14-ந்தேதி) கீழமாளிகை கிராம மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடினர். அப்போது அங்கு அழகு துரைக்கு சொந்தமான கிணற்று அருகே சென்ற சிலர் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.


கிணற்றுக்குள் பார்த்த போது ஒரு பெண் உடையின்றி நிர்வாண நிலையில் கிடந்ததை பார்த்தனர். இது குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெவித்தனர்.

சம்பவ இடத்திற்கு இரும்பு லிகுறிச்சி போலீசார் மற்றும் செந்துறை தீயணைப்பு படை வீரர்கள் விரைந்தனர். கிணற்றுக்குள் கிடந்த உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

அப்போது பிணமாக கிடந்தது காணாமல் போன நந்தினிதான் என தெரியவந்தது. அவரது உடலை தாயார் மற்றும் உறவினர்கள் அடையாளம் காட்டினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு எற்பட்டது.

நந்தினியின் உடலை அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் மீது மீண்டும் சந்தேகம் எழுந்தது.

இதை தொடர்ந்து மீண்டும் மணிகண்டனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் நந்தினியை சம்பவத்தன்று அழைத்து வந்து வீட்டில் அடைத்து கற்பழித்து கொலை செய்ததாகவும், இதற்கு தனது நண்பர்கள் உதவியதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மணிகண்டனுக்கு உதவியதாக அவரது நண்பர்கள் மணிவண்ணன், மற்றொரு மணிகண்டன், ராஜதுரை, வெற்றிச் செல்வன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

முதலில் போலீசார் மணிகண்டனை மட்டும் கைது செய்தனர். ஆனால் நந்தினியின் உறவினர்கள் அவரது கொலையில் உடந்தையாக இருந்த நண்பர்களையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி அரியலூர் பஸ் நிலையம் மற்றும் தாசில்தார் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரவளவன் தலைமையில் சாலை மறியல் செய்தனர்.

அதன் பிறகு நண்பர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகே மறியலை கைவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News