செய்திகள்

திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் அனைத்துக்கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2017-01-11 15:48 IST   |   Update On 2017-01-11 15:48:00 IST
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டிற்கான தடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே சிராவயலில் அனைத்துக் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டிற்கான தடையை அகற்றக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் வேலுச்சாமி அம்பலம் தலைமை வகித்தார்.

தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரிய கருப்பன், தி.மு.க.இலக்கிய அணி முன்னாள் அமைச்சர் தென்னவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூ, கட்சி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உதயகுமார், தே.மு.தி.க. சார்பில் சரவணன், ம.தி.மு.க. சார்பில் இருதயராஜன், விடுதலை விரும்பி, தமிழர் தேசிய முன்னணி சார்பில் மாநிலச் செயலாளர் மாறன், தமிழர் முன்னணி தேசியச் செயலாளர் சரவணன், சமத்துவ மக்கள் கட்சி பிரான்சிஸ் அந்தோணி, ஜல்லிக்கட்டுப் பேரவை மாநிலச் செயலாளர் நாராயணன், காங்கிரஸ் சார்பில் மாங்குடி, டாக்டர்.திருப்பதி, இந்திய குடியரசு கட்சி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்கக் கோரியும், நிபந்தனை இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்யக் கோரியும் அனைத்துக் கிராமங்களிலும் மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெறக் கோரியும், தொடர் முழக்கமிட்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிரா வயல் மஞ்சுவிரட்டு விழாக்குழு மற்றும் அனைத்து மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டிப் பந்தய ஆர்வலர்கள் மற்றும் சிராவயல் சுற்றுவட்டார கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ் பாரம்பரிய பண்பாடு காக்க மாணவர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். அதற்காக நடந்த சென்னை மெரினா ஆர்ப்பாட்டம் முக்கியமானதாகும். தொடர்ந்து நடைபெறப் போகும் மாணவர்கள் போராட்டத்தால் நமது பண்பாடு காக்கப்படும். விவசாயம் பாதிக்கப்பட்டதற்கும் மழை பொய்ப்பிற்கும் கலாச்சார மரபுகள் அழிக்கப்பட்டதுதான் காரணம். இந்த ஆண்டு எந்த தடையிருப்பினும் சிராவயலில் மஞ்சுவிரட்டு நடந்தே தீரும். இதற்கு அனைவரும் ஒன்றுகூடி ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Similar News