சிவகங்கை அருகே போலீஸ்காரரை தாக்கிய ரவுடி சுட்டுக்கொலை - என்கவுன்டர் செய்யப்பட்டாரா?
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் கார்த்திகைசாமி (வயது 26). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, வழிப்பறி, கொள்ளை, மிரட்டல் செய்ததாக வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் நேற்று கார்த்திகைசாமி தனது ஆதரவாளர்களுடன் மதுரைக்கு காரில் சென்றார்.
மதுரை மாவட்டம், கூடக்கோவில் போலீஸ்சரகம், எலியார் பத்தியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட்டுள்ளார். அப்போது பங்க ஊழியரான மதுரை கைத்தறிநகரை சேர்ந்த நாகராஜன் என்பவருடன் அந்த கும்பல் தகராறு செய்தது.
இதில் ஆத்திரமடைந்த கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் நாகராஜனை சரமாரியாக அடித்து உதைத்தனர். ரத்த வெள்ளத்தில் அவர் அங்கு மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கி விட்டு தப்பியது.
இதுகுறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர்.
ஊழியரை தாக்கிவிட்டு சென்ற கும்பல் சிவகங்கையை நோக்கி செல்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தமாவட்ட போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். அனைத்து ரோந்து போலீசாருக்கும் தப்பி சென்ற கும்பலின் கார் எண் வயர்லெஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் டி.எஸ்.பி. பால முருகன், சிவகங்கை டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்குள்ள சிவகங்கை மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை கார்த்திகை சாமி தனது ஆதரவாளர்களுடன் காரில் மானாமதுரை சோதனை சாவடிக்கு வந்தார். அங்கு போலீசார் காரை நிறுத்துமாறு கூறினர். ஆனால் கார்த்திகை சாமி காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். இதையடுத்து போலீசார் காரை விரட்டி சென்றனர்.
இந்நிலையில் மானா மதுரை- சிவகங்கை ரோட்டில் சிவகங்கை டவுன் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் வேல்முருகன் ரோந்து பணி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு வயர்லெஸ் மூலம் தகவல் கிடைத்ததன் பேரில், கார்த்திகை சாமி அந்த வழியாக ஓட்டி வந்த காரை மறித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வேல்முருகனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் அந்த கும்பல் சிவகங்கை அருகே உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பியது.
சிவகங்கை டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார், தொடர்ந்து ரவுடி கார்த்திகை சாமி மற்றும் அவரது கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே கார்த்திகை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவகங்கை அருகே காயான்குளம் பகுதியில் உள்ள மூட்புதரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் கார்த்திகைசாமி மற்றும் அவரது கும்பலை சரண் அடையுமாறு போலீசார் எச்சரித்தனர்.
ஆனால் அவர்கள் சரணடைய மறுத்ததோடு திடீரென்று போலீசார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகைசாமி மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது தப்ப முயன்ற கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
சிவகங்கையில், ரவுடி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் தற்காப்புக்காக ரவுடியை சுட்டனரா? அல்லது என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்படுத்தி யுள்ளது.