செய்திகள்

பொங்கல் விடுமுறை ரத்து: மத்திய அரசை கண்டித்து தபால் ஊழியர்கள் போராட்டம்

Published On 2017-01-10 05:35 GMT   |   Update On 2017-01-10 05:35 GMT
பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பணிபுரியும் தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
சிவகங்கை:

பொங்கல் விடுமுறையை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து வருகிற 14-ந் தேதி பொங்கலன்று தமிழகத்தில் பணிபுரியும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் ஒட்டுமொத்த விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.

தமிழர்களின் கலாச்சார பண்பாட்டினை உணர்த்திடும் வகையில் பொங்கலன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு இதுவரை விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் தபால் துறையில் பணிபுரியும் ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு 14-ந் தேதி பொங்கலன்று விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் தமிழகத்தில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்து உள்ளது. மத்திய அரசுத்துறையான தபால் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழ் பண்டிகையான பொங்கல் தினம் மட்டும் தான் விடுமுறை ஆகும். அந்த விடுமுறையும் தற்போது மத்திய அரசு இல்லை என்று கூறி விட்டது.

எனவே மத்திய அரசின் இத்தகைய பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) பொங்கலன்று அனைத்து தபால்துறை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக விடுமுறையில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் தபால் துறையில் சுமார் 5 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

நகர் மற்றும் கிராமப்புற அஞ்சலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால் பணிகள் பாதிக்கப்படும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தபால் துறை ஊழியர்கள் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்துள்ளார்கள்.

Similar News