திண்டுக்கல் அருகே மாமனாரை வெட்டிக் கொன்ற மருமகன்
சின்னாளபட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி என்.பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் அருளப்பன் (வயது55). இவரது மகள் செலின்சாந்தி. இவரும் கொடைக்கானல் பெரும்பாறை அருகே உள்ள உப்புபாறையை சேர்ந்த செல்லபாண்டியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பமான செலின் சாந்திக்கு பெற்றோர் வளைகாப்பு செய்து தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தனர். செல்லபாண்டிக்கு திண்டுக்கல் அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலை கிடைக்கவே அவரும் மாமியார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். செலின்சாந்திக்கு குழந்தை பிறந்தது.
கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்லபாண்டி மனைவியை அடித்தார். இதனை மாமனார் அருளப்பன் தட்டி கேட்டார்.
இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்பட்டதால் செல்லபாண்டிக்கு தலையில் அடிபட்டது.
ஆத்திரம் அடைந்த அவர் மண்வெட்டியால் மாமனார் அருளப்பன் தலைமையில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அருளப்பனை உறவினர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து சின்னாளபட்டி இன்ஸ் பெக்டர் பொன்னிவளவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி செல்லபாண்டியை கைது செய்தனர்.