செய்திகள்

வெள்ளகோவிலில் வி‌ஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை

Published On 2017-01-09 11:21 GMT   |   Update On 2017-01-09 11:21 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் மரவள்ளி சாகுபடி குறைந்ததால் மனமுடைந்த விவசாயி வி‌ஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளகோவில்:

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. விவசாய பயிர்கள் வாடி காய்ந்து கிடக்கிறது. இதனால் மனமுடைந்த ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பல விவசாயிகள் மாரடைப்பால் மரணம் அடைந்து வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூர் ராசாத்தாவலசு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (65). விவசாயி. இவர் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 3 மாதத்துக்கு முன்பு மரவள்ளி கிழங்கு பயிரிட்டார்.

மழை இல்லாததாலும், கடும் வறட்சியின் காரணமாகவும் கிழங்கு நன்கு வளரவில்லை. இதனால் 30 டன் கிடைக்க வேண்டிய மரவள்ளி கிழங்கு வெறும் 4 டன் அளவுக்கே சாகுபடியானது.

அதிக செலவு செய்து குறைந்த அளவிலேயே மரவள்ளி கிழங்கு சாகுபடி ஆனதாலும், கடன் தொல்லையாலும் விவசாயி தங்கவேல் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த தங்கவேல் திடீரென தென்னை மரத்துக்கு வைக்கும் வி‌ஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் இருந்தார். இதைப்பார்த்த அவரது மகன் திருமூர்த்தி அவரிடம் விசாரித்த போது, தங்கவேல் வி‌ஷ மாத்திரை சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு வெள்ளகோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் ஏராளமான விவசாயிகள் திரண்டு வந்து தங்கவேலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஏற்கனவே அவினாசி அடுத்த தெக்கலூர் பகுதியில் தென்னை விவசாயி சின்னப்பன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது மரவள்ளி கிழங்கு விவசாயி தங்கவேல் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

Similar News