செய்திகள்

வில்லிவாக்கத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமித்திருந்த கோவில் நிலம் மீட்பு

Published On 2017-01-09 15:27 IST   |   Update On 2017-01-09 15:27:00 IST
வில்லிவாக்கத்தில் தனியார் பள்ளி ஆக்கிரமித்து இருந்த கோவில் நிலத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
வில்லிவாக்கம்:

வில்லிவாக்கத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் பாடி மேம்பாலம் அருகே உள்ளது.

இந்த இடத்தின் ஒரு பகுதியை அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு குத்தகை அடிப்படையில் கொடுத்து இருந்தனர்.

ஆனால் கடந்த 2008 முதல் அந்த இடத்திற்கு குத்தகை பணம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் கோவில் இடம் முழுவதையும் தனியார் பள்ளி ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறையினர் தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று காலை அகத்தீஸ்வரர் கோவில் நிலம் குறித்து ஆய்வு செய்தனர்.

அப்போது குத்தகை பணம் கொடுக்காமல் கோவில் நிலம் முழுவதையும் தனியார் பள்ளி ஆக்கிரமித்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து மைதானத்தில் இருந்த தடுப்புகளை அகற்றி கோவில் நிலம் முழுவதும் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.150 கோடி ஆகும்.

Similar News