சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் சம்பவம்: 2 பெண்களை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா குமாரப்பட்டியை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் சம்பவத்தன்று மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பார்வதியை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் பின் தொடர்ந்துள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென்று மர்ம ஆசாமிகள் 3 பேரும், பார்வதியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
தேவகோட்டையை அடுத்துள்ள திருவேகம் பத்தூர் அருகே குமாணி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி ஜெயா (41). இவர் சம்பவத்தன்று பாவனக்கோட்டையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த 2 நபர்கள், ஜெயாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறிக்க முயன்றனர்.
உஷாரான ஜெயா செயினை இறுக்க பிடித்துக் கொண்டார். இதில் அவர் கீழே விழுந்தார். சில மீட்டர் தூரம் ஜெயாவை இழுத்து சென்ற கொள்ளையர்கள் அவரை தாக்கி 2 பவுன் செயினை பறித்து சென்றனர். 5 பவுன் செயின் ஜெயா கையில் இருந்தது.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருவேகம் பத்தூர் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் நகைப்பறி, வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.