செய்திகள்

சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளை

Published On 2016-12-27 17:28 IST   |   Update On 2016-12-27 17:28:00 IST
சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எப்போதும் மக்கள் நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில் இந்த கடை அமைந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு விற்பனையாளர் சிவக்குமார் சென்று விட்டார்.

மறுநாள் காலையில் டாஸ்மாக்கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த விற்பனையாளர் சிவக்குமார் டாஸ்மாக் கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த ரூ. 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து குருவிகுளம் போலீசில் சிவக்குமார் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சமீபகாலமாக சங்கரன்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. எனவே போலீசார் இரவு நேரங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News